ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 115
इन्द्रियाणां मनश्चास्मि ... (अध्याय १० - श्लोक २२)
இந்த்ரியாணாம் மனஶ்சாஸ்மி ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 22)
Indriyaanaam Manaschaasmi ... (Chapter 10 - Shlokam 22)
அர்தம் : இந்த்ரியங்களில் நான் மனஸ் ...
நமக்கு ஐந்து ஞானேந்த்ரியங்கள் . தர்ஶனம் (பார்க்கும் ஆற்றல்) , ஶ்ரவணம் (கேட்கும் ஆற்றல்) , ஸ்பர்ஶனம் (தொட்டு உணரும் ஆற்றல்) , ஜிக்னன் (நுகரும் ஆற்றல்) மற்றும் அஶ்னன் (ருசித்து உணரும் ஆற்றல்) . இந்த ஆற்றல்களுக்கான கருவிகள் முறையே கண் , காது , தோல் , நாஸி மற்றும் நாக்கு .
இந்தக் கருவிகள் அத்புதமானவை . அவை செய்யும் கார்யங்களும் மஹத்தானவை . நுட்பமானவை . நமக்கு ஆனந்தம் அளிப்பவை . உலகத்தின் நிறங்களையும் , ரூப லாவண்யங்களை நமக்குப் பரிமாறுவது கண் . கண் மிகச் சிறந்த கருவி என்று தோன்றிடும் . ஆனால் , கொஞ்ஜம் ஆராய்ந்தால் கண் ஒரு த்வாரம் மாத்ரமே என்பது விளங்கிடும் . பழைய காலத்தில் இருந்த கேமராவின் ஷட்டர் போல . வெளிக் காக்ஷிகளை உள்ளே நுழைய விடுவதுடன் அதன் வேலை முடிந்தது . உள்ளே வந்திருக்கும் காக்ஷிகளை அலசி , ஆராய்ந்து நிர்ணயத்திற்கு வருவதெல்லாம் பின்னால் இருக்கும் மூளை மற்றும் நரம்புகளின் வேலை . இவை எல்லாம் தத்தம் கார்யங்களைச் செய்து முடித்த பின் , அந்தக் காக்ஷியின் ஆனந்தத்தில் லயிப்பது மனஸ் . அதில் ப்ரமித்து மயங்குவது மனஸ் . இதே போலத்தான் மற்ற இந்த்ரியங்களும் அவற்றின் கருவிகளும் . இவற்றுக்குப் பின்னால் ராஜாவைப் போல அமர்ந்திருப்பது மனஸ் .
மனஸ் இருக்கிறதா ? இருக்கிறது ஆனால் இல்லை . இல்லாமல் இருக்கிறது . எங்கு இருக்கிறது ? எங்கும் இருக்கிறது .. எங்கும் இல்லை . மனஸ் தான் இந்த இந்த்ரியங்களை இயங்குகிறதா ? இல்லை . ஆனால் , மனஸ் இல்லை என்றால் இந்த்ரியங்கள் செயலற்றுப் போய் விடுகின்றன . மனஸ் கண்களுக்குப் பின்னால் இல்லை என்றால் , காக்ஷிகள் உள்ளே பதிய மறுக்கின்றன . இவை அனைத்தும் பரமனின் லக்ஷணங்கள் .
இந்த்ரியங்களில் மனஸ் நான் ... என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .
Comments
Post a Comment