ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 116
रुद्राणां शङ्करश्चास्मि ... (अध्याय १० - श्लोक २३)
ருத்ராணாம் ஶங்கரஶ்சாஸ்மி ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 23)
Rudraanaam Shankaraschaasmi ... (Chapter 10 - Shlokam 23)
அர்தம் : ருத்ரர்களில் ஶங்கரன் நான் ...
ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறான் ... "ருத்ரர்களில் நான் ஶங்கரன்" ... ருத்ரர்கள் யாவர் ? அவர்களில் ஶங்கரன் யார் ? என்றெல்லாம் அறிவதற்கு முன்னர் அடிப்படையான ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தனை செய்வோம் .
ஸாதாரண மநுஷ்யர்களான நமக்கு ஶிவன் , ஶங்கரன் , ருத்ரன் எல்லாம் ஒன்றுதான் . ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு ஶங்கரன் நான் என்கிறான் . ஶங்கரன் என் அடியாள் , ஶங்கரன் எனக்கு ஜூனியர் என்றெல்லாம் சொல்லவில்லை . சில ஸ்ரீ க்ருஷ்ண பக்தி இயக்கங்கள் ஶங்கரனை "Demi God" (சிறு தெய்வம்) என்கின்றன .
அத்வைதம் இணைக்கிறது . அனைத்தும் ஒன்றே என்கிறது . ஒன்றைப் பார்க்கத் தூண்டுகிறது . மற்ற கருத்துக்கள் பிரிக்கின்றன . இது வேறு , அது வேறு என்ற பார்வையைத் தூண்டுகின்றன . அவனுடைய பெயரை வைத்துக் கொள்ளாதே . அவனுடைய ஆலயத்திற்குச் செல்லாதே . அவனைப் பற்றிய புஸ்தகங்களைப் படிக்காதே என்றெல்லாம் கூறி தன்னை மற்ற அனைவரிடம் இருந்தும் பிரித்து வாழத் தூண்டுகின்றன . நான் கீதை ப்ரசாரத்தில் தமிழக க்ராமங்களுக்குச் சென்ற போது , ஶிவகாஶி அருகில் ஒரு க்ராமத்தில் ஒரு வைஷ்ணவர் வீட்டில் தங்கி இருந்தேன் . மூன்றாவது தினம் அவர் ஒரு கேள்வி கேட்டார் . "நீங்கள் விபூதி தரித்து கீதை பேசுகிறீர்களே" ? மூன்று தினங்களாக இந்தக் கேள்வி அவர் மனஸை உறுத்தி இருக்கிறது . "எனக்கு வேதம் தான் ஸர்வோபரி . வேதத்தில் விபூதி மாத்ரம் தான் குறிப்பிடப் பட்டுள்ளது . மற்றவை எல்லாம் பின்னர் வந்தவை" என்றேன் . விபூதி என்பது ஶிவன் இல்லை . விபூதி அல்லது பஸ்மம் நம் தேஶத்தின் பற்பல ஸமுதாயங்களைப் பிணைத்திடும் பாலம் .
அத்வைதம் மாத்ரமே ஸமுதாயத்தில் ஆரோக்யமான சூழ்நிலையை, ஸௌஹார்தமான இணக்கமான உறவுகளை வளர்க்க ஹேதுவானது . ஶைவம் , வைஷ்ணவம் என்பதெல்லாம் தனிப்பட்ட ஆராதனைக்கு பாதைகள் . அனைத்துப் பாதைகளிலும் ஒருவர் செல்ல வேண்டும் என்பது அவஶ்யம் இல்லை . தனக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து , ஶ்ரத்தையுடன் அந்த ஒரே பாதையில் செல்வதுதான் சரி . ஆனால் , அனைத்தும் ஒன்றே என்ற பார்வைதான் ஆதாரம் .
இந்தப் பின்னணியில் பார்க்கும் போது , 2,500 வர்ஷங்கள் முன்னர் பாரதத்தில் அவதரித்த மஹாத்மா ஆதி ஶங்கரனின் மஹத்வம் புரிகிறது . ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றி அவர் படைத்த ஶ்லோகங்களினும் அழகானவை , மதுரமானவை , அவருக்குப் பின்னர் எழுதப் பட்டனவா என்பது ஸந்தேஹமே .. அவர் வேத உபநிஷதங்களுக்கும் பாஷ்யம் எழுதினார் . கீதைக்கும் எழுதினார் . ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கும் எழுதினார் . அவரைப் பின்பற்றும் ஸமுதாயம் ஶிவராத்ரீயையும் அநுஷ்டிக்கிறது . தேவி நவராத்ரீயையும் அநுஷ்டிக்கிறது . ஸமமான பக்தி ஶ்ரத்தையுடனும் , உத்ஸாஹத்துடனும் ஸ்ரீ ராம நவமி , ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டமியையும் கொண்டாடுகிறது .
கீதையில் ஒரு அத்வைத ஸாரமே .. இந்த திஶையில் ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வாக்யம் அத்புதமானது . ருத்ரர்களில் ஶங்கரன் நானே ...
Comments
Post a Comment