Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 119


கீதையில் சில சொற்றொடர்கள் - 119


स्थावराणां हिमालयः ...  (अध्याय १० - श्लोक २५)
ஸ்தாவராணாம் ஹிமாலயஹ ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 25)
Sthaavaraanaam Himaalayah ...  (Chapter 10 - Shlokam 25)

அர்தம் :  ஸ்தாவரங்களில் , அஸைவற்றவைகளில் , நான் ஹிமாலயம் ...

பாரதம் ஒரு புண்ய பூமி , ஒரு தேவ பூமி என்று சொல்வதற்கு பளிச்சென்று உள்ள சான்று ஹிமாலயம் .  ஹிம அல்லது ஹேம என்றால் பனி .  பனியின் உறைவிடம் .  பனி மலை .

பாரதத்தின் வடமேற்கு ஆஃப்கானிஸ்தான் எல்லையில் இருந்து வடகிழக்கு சீன - பர்மீய எல்லை வரை ஒரு பாதுகாப்புக் குடையைப் போல , ஓர் உயர்ந்த கோட்டைச் சுவரைப் போல நிற்கிறது ஹிமாலயம் .  வடக்கில் இருந்து வீஸிடும் குளிர்க் காற்றைத் தடுத்து , பாரத தேஶத்தைக் கடும் குளிரில் இருந்து காப்பது ஹிமாலயம் .  தென் மேற்கில் இருந்து வீஸிடும் பர்வ மழைக் காற்றைத் தடுத்து , மீண்டும் பாரதத்தின் கிழக்கு ப்ரதேஶங்களுக்கு திருப்பி அநுப்புவது ஹிமாலயம் .  இதன் மூலம் , பாரதத்தின் பெரும்பாலான ப்ரதேஶங்களில் வர்ஷந்தோறும் நல்ல மழைக்கு ஏற்பாடு செய்வது ஹிமாலயம் .  பாரதத்தின் ஜீவ நதிகளின் உத்கம ஸ்தானமாக இருந்து , பாரதத்தின் அபாரமான நீர் வளத்திற்கும் மண் வளத்திற்கும் காரணமாக அமைந்தது ஹிமாலயம் .  ஆக , பாரதத்தின் பாதுகாப்பு , மிதமான ஶீதோஷ்ணம் , பரவலான மழை , வளமான பொருளாதாரம் இவற்றில் ஹிமாலயத்தின் பங்கு பெரும் பங்கு .

குன்று தோறும் கோயில் என்ற நம்பிக்கைக்கும் , இந்த நம்பிக்கைக்கு பாரத தேஶம் முழுவதும் செயல் வடிவம் கிடைத்ததும் ஹிமாலயத்தினாலே .

ஹிமாலயம் ஸ்ரீ ஶிவனின் வாஸஸ்தலம் .  அதற்கும் மேல் , ஹிமாலய மலையே ப்ரத்யக்ஷ ஶிவ ஸ்ரூபம் .  ஸ்ரீ விஷ்ணுவின் திவ்ய க்ஷேத்ரங்களும் அம்பாளின் ஶக்தி பீடங்களும் தீர்தங்களும் நிறைந்த மலை ஹிமாலயம் .  பாரதம் முழுவதும் ஒவ்வொரு மலையையும் பரமனின் ஸ்வரூபமாகக் கருதி , உச்சியில் ஆலயம் எழுப்பி , கிரி ப்ரதக்ஷிணங்கள் நடக்கின்றன என்றால் அதற்கு நம் ஆழ் மனஸில் கம்பீரமாக நிற்கும் ஹிமாலயம் தான் காரணம் .

காடு வா வா என்று அழைக்கிறது என்பார்கள் .  காடு என்பது சுடுகாடு இல்லை .  காடு என்பது ஆரண்யம் .  வனம் .  உலக பந்த பாஷங்களில் இருந்து விடுபட்டு , ராக த்வேஷங்களைத் துறந்து வைராக்யம் அடைய வேண்டும் , ஹிமாலயத்திற்குப் போய் விட வேண்டும் என்ற பேரவா தான் இந்த சொல்லிற்கு மூலம் .  ஹிந்துக்களின் மனஸில் த்ருடமாகப் புதைந்து இருக்கிறது இந்த ஸுப்த ஆஶை அல்லது கனவு .  இதை ஆயிரம் பல்லாயிரம் வர்ஷங்களாக உயிருடன் வைத்திருப்பது ஹிமாலய மலை .  இதைச் செயல் படுத்த முடியாமல் போகலாம் .  ஆனால் , கனவு மாத்ரம் உயிருடன் இருக்கிறது என்பது ஸத்யம் .  போகிறவர்கள் அனைவருக்கும் ஹிமாலயம் தான் லக்ஷ்யம் .  அன்று ஆதி ஶங்கரன் முதல் இன்று ஸ்வாமி சின்மயானந்த , ஸ்வாமி தயானந்த வரை .  ஹிமாலயத்தை அடைய முடியாதவர்க்கு உள்ளூரில் கொல்லி மலை, திருவண்ணாமலை , பொதிகை மலை , குடகு மலை , அஹோபிலம் , பேடாகாட் என்று அநேக மலைகள் இருக்கின்றன என்பதும் ஸத்யம் .  எனினும் , இவை அனைத்தும் ஹிமாலயத்தின் சிறு வடிவங்களாகவே கருதப் படுகின்றன .  இவ்வகையில் , ஹிந்துவின் வாழ்க்கையில் ஆன்மீகத்திற்கு உறுதியான ஆதாரம் அமைத்தது ஹிமாலயம் .

ஒரு முறையேனும் ஹிமாலயத்தை அநுபவித்தவரால் தான் , ஹிமாலயத்தின் பேரமைதி , ஆன்மீகத் தூண்டுதல் , தெய்வீக வாஸம் நிறைந்த பாவனையைப் புரிந்து கொள்ள முடியும் .

ஸ்தாவராணாம் ஹிமாலயஹ  ...  ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ... 

Comments