ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 139
सुरसंगा केचितभीताः प्राञ्जलयो ... (अध्याय ११ - श्लोक २१)
ஸுர ஸங்கா கேசித் பீதாஹ் ப்ராஞ்ஜலயோ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 21)
SuraSangaa Kechit Bheetaah Praanjalayo ... (Chapter 11 - Shlokam 21)அர்தம் : தேவர்களில் ஸிலர் பயந்து இரு கைகளைக் கூப்பி வணங்குகின்றனர் ..
பரமாத்மாவின் உக்ர ஸ்வரூபத்தை அர்ஜுனன் வர்ணிக்கிறான் .. மநுஷ்யன் பயம் கொள்ளலாம் .. மரணத்தின் தர்ஶனம் பெற்று நடுங்கலாம் .. அதில் ஆஶ்சர்யம் ஏதும் இல்லை .. தேவர்கள் ஏன் பயப்பட வேண்டும் ?
தேவர்கள் ஸ்வர்க வாஸிகள் .. ஸ்வர்கம் என்பது ஸுகங்களின் பெட்டகம் .. ஸுகம் என்றால் வெறும் ஸுகம் இல்லை .. ஸுகத்தின் உச்சம் .. ஸுகத்தின் எல்லை .. து:கத்தின் கலப்பு இல்லாத ஸுகம் .. இதைத் தாண்டி வேறு ஸுகம் ஏதும் இருக்க முடியாது என்ற நிலை .. தேவர்கள் இத்தகைய ஸுகத்தில் திளைத்திருப்பவர்கள் ...
ஸுகம் வந்தாலே அதனுடன் பயமும் இணைந்து வரும் .. ஸுகமும் பயமும் ஒட்டியே இருப்பவை .. ஸுகம் வற்றி விடும் என்ற பயம் .. ஸுகம் அநுபவிப்பதற்கான ஆற்றல் மங்கி விடும் என்ற பயம் .. ஸுகம் அநுபவிப்பதற்கான அர்ஹதை , அதிகாரம் , பதவி பறிக்கப் படும் என்ற பயம் .. ஸுகம் அநுபவிக்க போட்டி தோன்றிடும் என்ற பயம் .. ஸுகத்தை அநுபவிக்கக் கூட வேண்டாம் .. ஸுக நாட்டம் வந்து விட்டாலே போதும் .. ஸுகம் வேண்டும் என்ற ஆஶை வந்து விட்டாலே போதும் .. பயம் பிறந்து விடும் ..
தேவர்கள் பயந்து , கை கூப்பி , பரமனை வணங்குகின்றனர் என்கிறான் அர்ஜுனன் .. பரமனே அனைத்து ஸுகங்களுக்கும் ஊற்று என்று கருதுவதால் .. அவனது அருள் இருந்தால் மாத்ரமே ஸுகம் அநுபவிக்கும் தங்கள் அதிகாரமும் அர்ஹத்தையும் தொடரும் என்று கருதுவதால் .. பயந்து கை கூப்பி வணங்குகின்றனர் .. நம் மநுஷ்ய பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் .. "லஞ்ஜ ஊழலுக்கும் , லஞ்ஜப் பணத்தில் ஸுக போக வாழ்க்கைக்கும் பழகி விட்ட ராஜாங்க ஊழியர் அதிகாரிகளுக்குக் கூழ் கும்பிடு போடுவதைப் போல" என்று சொல்லலாம் .. ...
தேவர்கள் என்றால் நிஶ்சயமாக , உறுதியாக தர்மத்தின் பக்ஷம் ஸாய்ந்து இருப்பர் என்று இல்லை .. ஸ்ரீ ராம - ராவண யுத்தத்தில் எண்பது தினங்கள் வரை தேவர்கள் எந்த பக்கமும் ஸாயாமல் , வானத்தில் இருந்து பொதுவாக .. ஜய ஹோ .. வெற்றி உண்டாகட்டும் என்று கோஷம் இட்டுக் கொண்டு இருந்தனர் .. ஸ்ரீ ராமனின் வெற்றி நிஶ்சயம் , அவனது பந்துக்களும் மைந்தர்களும் முக்யமான வீரர்கள் அனைவரும் இறந்து விட்டதால் இனி ராவணன் ஜயிப்பதற்கான வாய்ப்பே இல்லை ராவணனின் தோல்வி நிஶ்சயம் என்ற நிலை வந்த பிறகு தான் , ஸ்ரீ ராமன் பூமியில் நின்று யுத்தம் புரிவது அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது .. அவருக்கு ஒரு ரதத்தை அநுப்பி வைக்கின்றனர் ..
இதே ஸுக நாட்டம் காரணமாக தேவர்கள் தவறுகள் செய்ய முற்படுகின்றனர் .. பிடிபட்டு ஶாபங்களுக்கு ஆளாகின்றனர் ..
Comments
Post a Comment