ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 142
प्रसीद देवेश जगन्निवास ... (अध्याय ११ - श्लोक २५)
ப்ரஸீத தேவேஶ ஜகந்நிவாஸ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 25)
Praseeda Devesha Jagannivaasa .. (Chapter 11 - Shlokam 25)அர்தம் : ஹே ஜகந்நிவாஸனே !! ப்ரஸன்னம் ஆகி விடுங்கள் ..
அர்ஜுனனின் கோரிக்கை இது .. அவன் ஸ்ரீ பரமாத்மனைப் பார்த்து இவ்வாறு கோருகிறான் .. அவரது விராட தர்ஶனத்தைப் பார்க்க ஆஶைப் பட்டது அர்ஜுனன் .. மரணத்தின் தாண்டவத்தை , ஸ்ரீ பரமாத்மன் தமது படைப்பை அழித்திடும் காக்ஷியைக் காண்கிறான் .. பயந்து விடுகிறான் .. இந்தக் கோரிக்கையை வைக்கிறான் .. "ப்ரஸன்னம் ஆகி விடுங்கள்" என்கிறான் ..
இதில் ரெண்டு விஷயங்கள் நம் கவனத்திற்கு வருகின்றன .. ஒன்று .. பக்தியின் மஹிமை .. மற்றொன்று .. மநுஷ்ய மனஸின் தன்மை ...
பக்தி ஒரு மநுஷ்யனுக்கு பகவானிடம் எத்தகைய உரிமை அளிக்கிறது பாருங்கள் ... வேண்டுகோள் வைக்கிறான் .. கட்டளை இடுகிறான் .. பகவானும் பக்தனின் கோரிக்கையை ஏற்கிறார் .. கட்டளைக்குப் பணிகிறார் .. மற்ற மதங்களில் இது கல்பனைக்கும் அப்பாற்பட்டது .. அதனால்தான் ஹிந்து தர்மத்தில் ஒவ்வொரு தனி மநுஷ்யனுக்கும் தனிப்பட்ட உபாஸனைக்கு வழி உண்டு .. அவன் தன் விருப்பத்திற்கு ஏற்ற ரூபத்தில் பகவானை ஆவாஹனம் செய்து , பகவானைப் பற்றிய தன் கருத்திற்கு ஏற்ற படி (அதாவது தன் மனஸில் உள்ள ஶ்ரத்தைக்கு , பக்திக்கு ஏற்றபடி) அந்த ரூபத்தின் மூலம் பகவானுடன் உறவு கொள்ளலாம் .. ஆடலாம் .. பாடலாம் , பேசலாம் .. கொஞ்ஜலாம் .. உணவு ஊட்டலாம் .. அலங்கரிக்கலாம் .. தூங்க வைக்கலாம் .. குளிப்பாட்டலாம் .. வைத்யம் பார்க்கலாம் .. அதட்டலாம் .. இதுதான் ஸரியான வழிமுறை என்று எதுவும் கிடையாது ..
மற்ற மதங்களில் பகவானுக்கு ஒரு ஏஜண்ட் உண்டு .. அவர் சொன்னபடி , மற்ற அனைவரும் கூட்டாக , அவர் சொல்வதை செய்ய வேண்டும் .. சொல்வதை மாத்ரம் செய்ய வேண்டும் .. அதைத் தாண்டி எதையும் செய்ய உரிமை இல்லை .. தனிப்பட்ட ப்ரார்தனைக்கு இடம் இல்லை .. நம் ஹிந்து தர்மத்திலும் கோவில்கள் இருக்கின்றனவே ?? அங்கு அர்சகர்கள் இருக்கின்றனரே ?? கோவில்கள் ஸமுதாயத்தின் ஶக்தி கேந்த்ரங்கள் .. ஸமுதாய ஒற்றுமைக்கான ஏற்பாடு .. மற்றபடி பகவானுடன் உறவு என்பது ப்ரத்யேகமானது . தனிப்பட்ட விஷயம் ..
ஸூர்தாஸர் "க்ருஷ்ணனாக தர்ஶனம்" வேண்டினார் .. அவருக்கு க்ருஷ்ணனாக தர்ஶனம் அளித்தார் பகவான் .. "புல்லாங்குழலை வீசி எறிந்து விட்டு கோதண்டம் எடுத்த" ஸ்ரீ ராமனாக தர்ஶனம் கேட்ட துலஸீதாஸருக்கு அவ்வாறே தர்ஶனம் அளித்தார் .. ஸ்ரீ கனகதாஸர் ஆலயத்திற்குள் வர முடியவில்லையே என்று ஏங்கிய போது , அவருக்காக பின்பக்கம் திரும்பி , சுவற்றை உடைத்து தர்ஶனம் அளித்தார் உடுப்பி ஸ்ரீ க்ருஷ்ணன் .. பக்தன் அபிராம பட்டனுக்காக அமாவாஸ்யை பௌர்ணமியாக மாறியது ..
ரெண்டாவதாக , அர்ஜுனனின் கோரிக்கையில் மநுஷ்ய மனஸின் ஒரு தன்மை வெளிப்படுகிறது .. நாம் முன்னர் சர்சை செய்துள்ளோம் .. நாஶத்தைப் பார்க்க விரும்பாத மனஸ் .. நாஶத்தை ஏற்காத மனஸ் .. ரௌத்ரத்தைக் கண்டு நடுங்கும் மனஸ் .. உக்ரத்தைத் தவிர்க்க விழையும் மனஸ் .. ஹிரண்யகஶிபுவின் வதத்திற்குப் பிறகு ஸ்ரீ ந்ருஸிஹ்மரின் உக்ர ஸ்வரூபத்தை தேவர்களால் , ஏன் ! மாதா லக்ஷ்மீயாலும் தாங்க முடியவில்லை .. குழந்தை ப்ரஹ்லாதனை அவரிடம் அநுப்புகின்றனர் , அவரை ஶாந்தப் படுத்த ... அர்ஜுனன் ஒரு ஸாதாரண நரன் அல்லவா ?? ப்ரஸன்னம் ஆகி விடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறான் ..
Comments
Post a Comment