ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 147
तत् क्षामये .. पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायाः .. (अध्याय ११ - श्लोक ४२ , ४४)
தத் க்ஷாமயே அஹம் ... பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யுஹு ப்ரியஹ பிரியாயாஹ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 42 , 44)
TatKshaamaye Aham .. Piteva Putrasya Sakheva Sakhyuh Priyah Priyaayah ... (Chapter 11 - Shlokam 42 , 44)அர்தம் : பிதா புதல்வனை , ஸகா தன் நண்பனை , ப்ரியன் தன் ப்ரேமியை எவ்வாறு மன்னித்து விடுகிறானோ ... அவ்வாறு என்னை மன்னித்து விட வேண்டும் ..
க்ஷமா . மன்னிப்பு . கேட்பதும் விஶேஷம் . கொடுப்பதும் விஶேஷம் .. இங்கு அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் கேட்கிறான் .. அர்ஜுனனும் ஸ்ரீ க்ருஷ்ணனும் பால்ய ஸ்நேஹிதர்கள் . அத்தை மகன் - மாமன் மகன் என்ற உறவு வேறு .. சிறு வயஸில் சேர்ந்து சுற்றியவர்கள் .. விளையாடியவர்கள் .. பகிர்ந்து உண்டவர்கள் .. இங்கு யுத்த க்ஷேத்ரத்தில் அர்ஜுனன் கேட்டுக் கொண்டதால் அவனது ரதத்தின் ஸாரதியாக இருக்கிறான் .. அதாவது அர்ஜுனன் யஜமான் .. ஸ்ரீ க்ருஷ்ணன் வேலைக்காரன் .. இந்தப் பின்னணியில் அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்பது விஶேஷம் . கீதை கேட்கக் கேட்க , அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனின் பரமாத்ம ஸ்வரூபத்தை உணர்கிறான் .. "நான் இவனது மஹிமையை உணராமல் , டேய் , வாடா , போடா என்று மர்யாதை இல்லாமல் பேசி இருக்கிறேன் .. விளையாடி இருக்கிறேன் .. தோள் மேல் கை போட்டிருக்கிறேன் .. கிண்டல் செய்திருக்கிறேன் .." ஸ்ரீ க்ருஷ்ணனின் நிஜ ஸ்வரூபம் அறியாத போது செய்திருந்தாலும் அர்ஜுனன் பஶ்சாதாபம் அடைகிறான் .. க்ஷமா யாசனை செய்கிறான் .. ஒரு பெரியவர் தன் அன்பிற்குப் பாத்ரம் ஆனவனின் குழந்தைத் தனமான தவறுகளை மன்னித்து விடுவதைப் போல என்னை மன்னித்து விடு என்று வேண்டுகிறான் ..
தன்னை விட வயஸிலோ , தகுதியிலோ , படிப்பிலோ , குணத்திலோ , மஹிமையிலோ பெரியவரிடம் மன்னிப்பு கேட்பதில் ஆஶ்சர்யம் ஏதும் இல்லை .. இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் தன் ஸ்நேஹிதன் என்பதை மறந்து , தன் உறவினன் என்பதை மறந்து , இன்று தன் ஆக்ஞைக்குப் பணியும் சேவகன் என்பதை மறந்து மன்னிப்பு கேட்கிறான் அர்ஜுனன் .. அவன் பரமாத்ம ஸ்வரூபம் என்பதை உளமார உணர்ந்து விட்டதால் பணிந்து மன்னிப்பு கேட்க முடிகிறது அர்ஜுனனால் .. இது விஶேஷம் தான் என்றாலும் தன்னை விட மஹிமையிலோ தகுதியிலோ படிப்பிலோ குணத்திலோ வயஸிலோ சிறியவனிடம் மன்னிப்பு கேட்பது ஒரு மஹாத்மாவால் மாத்ரமே முடியும் ..
மன்னித்து விடுதலும் அவ்வாறே .. ஒரு பெரியவரால் சிறியவனை மன்னித்து விட முடியும் .. அன்பின் அடிப்படையில் மன்னித்து விட முடியும் .. தன்னை விட மூத்தவரை , தன்னை விட உயர்ந்தவரை மன்னிப்பது கடினம் ..
மன்னிப்புக் கோருதல் , மன்னித்தல் ஆகிய ரெண்டிற்கும் தடையாக இருப்பது அஹங்காரம் .. அஹங்காரம் அழித்தவரால் தான் மன்னிப்பு கேட்கவும் முடியும் .. மன்னித்து விடவும் முடியும் ..
Comments
Post a Comment