ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 153
सन्नियम्येन्द्रिय ग्रामम् ... (अध्याय १२ - श्लोक ४)
ஸந்நியம்யேந்த்ரிய க்ராமம் ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4)
Sanniyamyendriya Graamam ... (Chapter 12 - Shlokam 4)
அர்தம் : இந்த்ரியக் கூட்டத்தை நியமப் படுத்தி ...
இந்த்ரிய க்ராமம் என்பது இந்த்ரியங்களின் ஸமூஹம் .. இந்த்ரியங்கள் ஒவ்வொன்றும் விஶேஷமானவை .. ஒவ்வொன்றின் கார்யமும் தனித்தனியானவை .. ஆனால் , அனைத்து இந்த்ரியங்களும் புற உலகத்து விஷயங்களின் விவரங்களை உள்ளே கொண்டு வருபவை .. புற உலகத்து விஷயங்களுடன் உறவாடி , தாம் பெற்ற அநுபவங்களை உள்ளே கொண்டு வருபவை .. அதனால் இவற்றை ஒரு ஸமூஹமாக , இந்த்ரிய க்ராமமாக அறிவிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
இந்த்ரியங்களை செவ்வனே நியமப் படுத்தி .. நிர்குண நிராகார உபாஸனையில் இதை முதல் நிபந்தனையாகக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. குணங்களற்ற , உருவம் அற்ற பரப்ரஹ்ம பரமாத்மனை எவ்வாறு உபாஸனை செய்வது ? நம்மிடம் இருப்பதோ கால தேஶ எல்லைக்கு உட்பட்ட ஶரீரம் .. நம்மிடம் இருக்கும் மற்ற கரணங்களான இந்த்ரியங்களும் வரம்பிற்கு உட்பட்ட ஆற்றல் கொண்டவை .. அவற்றால் உருவம் கொண்டவற்றையும் (ஸாகார) , குணங்கள் கொண்டவற்றையுமே அறிய முடியும் .. கண் உருவங்களைப் பார்த்திடும் . அல்லது நிறங்களைப் (நிறம் விஷயங்களின் குணங்களில் ஒன்று.) பார்த்திடும் .. அதே போல , மற்ற இந்த்ரியங்களும் .. பரப்ரஹ்ம பரமாத்மனோ வரம்பற்றவன் .. எங்கும் வ்யாபித்திருப்பவன் .. அனைத்தையும் இயக்கிடும் ஆற்றலாக ஸூக்ஷ்மமாக இருப்பவன் .. அனைத்திலும் இருந்தும் இல்லாதிருப்பவன் .. சிந்தனைக்கும் வர்ணனைக்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்டவன் .. வரம்பிற்கு உட்பட்ட ஶரீரத்தாலோ , உருவங்களையும் குணங்களையும் மாத்ரம் அறிய வல்ல இந்த்ரியங்களால் பரப்ரஹ்ம பரமாத்மனை உபாஸிப்பது எங்ஙனம் ? அறிவது எங்ஙனம் ?? இந்த்ரியங்களை நியமப் படுத்துவது , தத்தம் கார்யங்களில் இருந்து விலக்குவது , ஒரு வகையில் அவற்றைச் செயலிழக்கச் செய்வது .. நிர்குணத்தை அறிவதற்கு முதல் நிபந்தனை ஆகி விடுகிறது .. இதையே அதிகக் கஷ்டமானது , க்லிஷ்டமானது என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
ஸகுண ஸாகார உபாஸனையில் , குணங்களுடன் கூடிய உருவத்தை வணங்கிடும் போது , இந்த்ரியங்களைப் பற்றி கவலைப் படத் தேவை இல்லை .. இந்த்ரியங்களை வஶப் படுத்துதல் பற்றியும் கவலை வேண்டாம் .. பரமாத்மனையே உருவம் உள்ளவனாய் , குணங்கள் உள்ளவனாய் , வரம்பிற்கு உட்பட்டவனாய் ஸுருக்கி விடுகிறோம் .. இந்நிலையில் அவனுடன் உறவு கொள்வது ஸுலபமாகி விடுகிறது .. அவனைத் தொட முடிகிறது .. அவனைக் குளிப்பாட்டி அலங்கரிக்க முடிகிறது .. அவனுடன் பேச முடிகிறது .. அவனுக்காக அழ முடிகிறது .. அவனுக்காகப் பாட முடிகிறது , ஆட முடிகிறது .. அவனுக்கு போஜனம் ஊட்ட முடிகிறது .. தாலாட்டுப் பாடி உறங்க வைக்க முடிகிறது .. இந்த்ரியங்களை நியமப் படுத்துதல் என்பது ஒரு தனிக் கார்யம் ஆவதில்லை .. உபாஸனைக்கு ஒரு நிபந்தனை இல்லை .. உபாஸனையின் விளைவாக இந்த்ரிய நியமனம் தன்னால் நேர்ந்து விடுகிறது .. இந்த்ரியங்களுக்கு வேறு எதுவும் ருசிப்பதில்லை .. கண்களுக்கு அவனது உருவம் , காதுகளுக்கு அவனது நாமம் மற்றும் கீர்தி , நாவிற்கு அவன் ப்ரஸாதம் , கால்களுக்கு அவன் ஆலயம் , கைகளுக்கு அவன் அலங்காரம் .. இந்த்ரியங்கள் மற்ற "கவர்ச்சிகரமான" உலக விஷயங்களை நாடுவதில்லை .. விஶேஷ ப்ரயத்னம் இல்லாமலே இந்த்ரியங்கள் நியமப்பட்டு விடுகின்றன .. அதனால்தான் ஸகுண ஸாகார உபாஸனை ஸுலபமானது என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
Comments
Post a Comment