ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 157
मदर्थमपि कर्माणि कुर्वन् ... (अध्याय १२ - श्लोक १०)
மதர்தமபி கர்மாணி குர்வன் ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 10)
Madarthamapi Karmaani Kurvan ... (Chapter 12 - Shlokam 10)
அர்தம் : செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்திடு ...
செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்திடு .. ஸகுண உபாஸனையில் ஸ்ரீ க்ருஷ்ணன் கூறிடும் பல யோஜனைகளில் ஒன்று இது .. இதைப் புரிந்து கொள்ள உகந்த உதாஹரணம் தாய் தந்தையருடையதே .. தாய் எதைச் செய்தாலும் தன் குழந்தைக்காகச் செய்கிறாள் .. குழந்தை ஆரோக்யமாக வளர்ந்திடவே ஸமைக்கிறாள் .. அவன் படித்திட கண் விழிக்கிறாள் .. அதற்கேற்ற படி தன் உறக்க நேரத்தை மாற்றிக் கொள்கிறாள் .. அவனுக்குக் கற்றுக் கொடுத்திட , புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறாள் .. புருஷன் அகால மரணம் அடைந்து விட்டால் , வாஸல் படி தாண்டி அறியாத பெண் , வெளி உலகம் கண்டிராத பெண் , குழந்தைக்காகவே வாழ்கிறாள் .. புதிய பல திறமைகளைக் கற்றுக் கொள்கிறாள் .. புதிய ஸவால்களை ஸந்திக்கிறாள் .. பல்வேறு இடர்களை எதிர்க்கொண்டு , குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறாள் ..
தந்தையோ வெளி உலகத்தில் சுற்றுகிறார் .. பலப்பல கஷ்டங்களோடு மோதுகிறார் .. பலப்பல அபமானங்களை ஸந்திக்கிறார் .. பணம் ஸம்பாதிக்கிறார் .. ஸம்பத்து சேர்க்கிறார் .. ஒரு நல்ல குடும்பத்தில் விவாஹம் செய்து கொண்டு மகள் போகும் போது வெளிப்படையாக மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்குகிறார் .. மகன் வளர்ந்து பெருமை மிகு உயரங்களை அடையும் போது மெளனமாக பெருமிதம் கொள்கிறார் .. தந்தையின் உழைப்பும் , கவலையும் , பெருமிதமும் , அனைத்துமே குழந்தைகளுக்காக .. என் தந்தைக்கு ஸிகரெட் புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தது .. என்னுடைய பன்னிரெண்டாம் பிறந்த தினத்தன்று , ஒரு ஸிகரெட் பற்ற வைக்கும் போது , "மகனுக்கு பன்னிரண்டு வயஸ் ஆகிறது .. வளர்ந்து வருகிறான் .. இந்தப் பழக்கம் எனக்கு அவஶ்யமா ?" என்றொரு கேள்வி அவர் மனஸில் உதித்தது .. பற்ற வைத்த ஸிகரெட்டை எறிந்து காலால் நஶுக்கினார் .. தத் க்ஷணம் புகை இழுக்கும் நெடுநாளைய அவரது பழக்கம் விலகியது .. செய்வது அனைத்தும் மகனுக்காக ..
குழந்தை ரக்தமும் ஶரீரமுமாக கண் முன்னால் இருக்கிறது .. மேலும் தன்னில் இருந்தே உருவானது என்ற எண்ணமும் இருக்கிறது .. தன்னுடையது என்ற பந்தமும் இருக்கிறது .. இந்நிலையில் குழந்தைக்காக வாழ்வதும் அனைத்து கர்மங்களையும் குழந்தைக்காகச் செய்வதும் ஸுலபம் இல்லை என்றாலும் மிகக் கடினமும் இல்லை .. ஆனால் , உலவும் ஶரீரம் இல்லாதபோதும் , மனஸில் நிறைந்துள்ள அந்த தெய்வ ஸ்வரூபத்தை ஒரு விக்ரஹத்தில் வார்த்து அந்த பரம ஸ்வரூபத்திற்காகவே வாழ்தலும் , அனைத்து கர்மங்களையும் செய்தலும் மிகக் கடினம் .. இவ்வகை உபாஸனையில் கோகுல ப்ருந்தாவன கோபிகள் ஈடுபட்டனர் .. அவர்கள் உபாஸனை செய்தது புல்லாங்குழல் ஊதி , மாடுகள் மேய்த்து , ஆடிப் பாடி , கோகுலத்தில் உலாவிய ஸ்ரீ க்ருஷ்ணனை .. அந்த குழந்தை க்ருஷ்ணன் கோகுலத்தை விட்டு வெளியேறிய பின்னரும் , கோபியரின் கண் பார்வையில் இருந்து மறைந்த பின்னரும் கோபியரின் க்ருஷ்ண உபாஸனை தொடர்ந்தது .. மீரா இதே வகை உபாஸனையில் ஈடுபட்டாள் .. சிறு வயஸில் தனக்குக் கிடைத்த ஸ்ரீ க்ருஷ்ண விக்ரஹத்தை பரமனாக உபாஸித்தாள் .. அந்த முரளீதர க்ருஷ்ணனுக்காகவே வாழ்ந்தாள் .. அனைத்து கர்மங்களையும் அவனுக்காகவே செய்தாள் .. ஸமீப காலத்தில் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் தாம் வழிபட்ட விக்ரஹத்தில் ஜகன்மாதா காளியை உபாஸித்தார் .. அவளுக்காகவே வாழ்ந்தார் . அனைத்து கர்மங்களையும் அவளுக்காகவே செய்தார் ..
Comments
Post a Comment