ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 177
अध्यात्मज्ञाननित्यत्त्वम् ... (अध्याय १३ - श्लोक ११)
அத்யாத்ம க்ஞான நித்யத்வம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 11)
Adhyaatma Gyaana Nityattvam .. (Chapter 13 - Shlokam 11)
அர்தம் : அத்யாத்ம சிந்தனையில் எந்நேரமும் திளைத்து இருப்பது ..
எந்நேரமும் அத்யாத்ம சிந்தனையில் திளைத்து இருந்தால் , உலக சிந்தனை எவ்வாறு செய்வது , எப்பொழுது செய்வது ?? உலக சிந்தனை இல்லாமல் உலகக் கார்யங்களைச் செய்வது எங்ஙனம் ?? அத்யாத்ம (ஆன்மீக) சிந்தனையில் இருந்த படி , உலகீய கார்யங்கள் செய்தல் இயலுமா ??
ஸ்ரீ நாரத பக்தி ஸூத்ரத்தில் பக்தியை விளக்குகிறார் ஸ்ரீ நாரதர் .. கதை கேட்டல் பக்தியா ? ஆலயத்திற்குச் செல்லுதல் பக்தியா ? இல்லை இல்லை .. கோகுலத்து கோபிகளைப் போல வாழ்வது பக்தி என்கிறார் .. வெளிப்படையான காக்ஷியில் , தோற்றத்தில் மாறுதல் இல்லை .. கோபிகளும் நம் அனைவரைப் போல , ஸாதாரண கார்யங்களில் ஈடுபட்டனர் .. ஆனால் , கார்யங்களை ஸ்ரீ க்ருஷ்ணனுக்காகவே செய்தனர் ..
கார்யங்களைத் தனக்காகச் செய்தல் , தானே செய்வதாகக் கருதிச் செய்தல் லௌகீகம் .. அதே கார்யங்களை அவனுக்காகச் செய்தால் அது ஆன்மீகம் .. லௌகீகம் அலுப்பு ஏற்படுத்த வல்லது .. களைத்துப் போகச் செய்வது .. ஆன்மீகம் அல்லது அத்யாத்மம் ஆனந்த மயமானது ..
அத்யாத்ம சிந்தனையில் இருந்த படி உலகக் கார்யங்களைச் செய்தால் , அனைத்து கார்யங்களும் அத்யாத்ம ஸாதனை ஆகி விடும் .. ப்ரத்யேகமாக ஆன்மீக முயற்சிகள் அவஶ்யம் இல்லை .. செய்தாலும் மனஸ் வெகு ஸஹஜமாக அம்முயற்சிகளில் லயித்து விடும் .. உலக சிந்தனை குறுக்கிடாது .. அம்முயற்சிகளைக் கெடுத்திடாது .. நேர்மாறாக , உலக சிந்தனையில் திளைத்தவாறு உலகக் கார்யங்களைச் செய்து விட்டு , ப்ரத்யேகமான ஆன்மீக ஸாதனைகள் அவனுக்காகச் செய்ய முயன்றிடும் போது , உலக சிந்தனை அம்முயற்சிகளில் குறுக்கிட்டுக் கெடுத்திடும் ..
உலகக் கார்யங்களை முடித்து விட்டு , உலக வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டு , வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அத்யாத்ம விசாரத்திலும் அத்யாத்ம முயற்சிகளிலும் ஈடுபடலாம் என்று பலரும் நினைப்பதற்கு உலக சிந்தனையை விலக்கி வைக்க முடியாததே காரணம் .. உலகக் கார்யங்களில் இருந்து விடுபட்டு விட்டாலும் , இவர்களால் உலக சிந்தனைகளில் இருந்து விடுபட முடிவதில்லை .. வாழ்க்கையின் அந்திம க்ஷணம் வரை உலக சிந்தனையில் மூழ்கி , பிணைக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர் இவர்கள் ..
Comments
Post a Comment