ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 201
असङ्ग शस्त्रेण दृढेन छित्वा .. (अध्याय १५ - श्लोक ३)
அஸங்க ஶஸ்த்ரேண த்ருடேன சித்வா .. (அத்யாயம் 15 - ஶ்லோகம் 3)
Asanga Shastrena Drushena Chittvaa .. (Chapter 15 - Shlokam 3)
அர்தம் : த்ருடமான பற்றின்மை என்ற ஶஸ்த்ரத்தால் இதை வெட்டு ..
ஸம்ஸாரம் என்பது என்ன ?? ஸம்ஸாரம் ஒன்றா ?? பலவா ?? படைக்கப் பட்டது ஒரு ஸம்ஸாரம் தான் .. ஆனால் , லோகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் லபிக்கும் ஸம்ஸாரம் வெவ்வேறு .. அவரவருக்கு அவரவர் கர்மங்களுக்கு ஏற்ற ஸம்ஸாரமே கிடைக்கிறது .. ஒருவனின் கர்ம வினைகளே அவனுக்குக் கிடைக்கும் ஸம்ஸாரம் .. இந்தக் கூற்று நமக்கு விசித்ரமாகத் தோன்றலாம் .. ஆனால் சிந்தித்தால் புரியும் ..
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் இடம் , பிறந்து வளரும் குடும்பம் , நிலவும் ஸமூஹச் சூழ்நிலை , நாம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் , அங்கு நிலவும் சூழ்நிலை , கிடைத்திடும் வாய்ப்புகள் , நட்பு வட்டம் , சென்று வரும் நகரங்கள் மற்றும் தேஶங்கள் , நமக்கு அறிமுகம் ஆகும் கலைகள் மற்றும் புஸ்தகங்கள் , நமக்குக் கிடைத்திடும் அநுபவங்கள் , நமக்குக் கிடைத்த அத்ருஷ்டத்தின் ஸஹாயம் , கண்ணுக்குப் புலப்படாத ஶக்தியின் காரணமாக நாம் இழந்த வாய்ப்புகள் , போன்று எத்தனை எத்தனை விஷயங்கள் .. இவற்றுக்கு மேல் எத்தனை எத்தனை கோபங்கள் , வெறுப்புகள் , பொறாமைகள் , வாக்கு வாதங்கள் , அஹங்கார வெளிப்பாடுகள் , பழி வாங்கல் , மனத் தொய்வுகள் , ஆணவத் துள்ளல்கள் .. நமக்கு அறிமுகம் ஆகும் உலகம் , நாம் பார்த்திடும் ஸம்ஸாரம் நமக்கு மாத்ரமே கிடைப்பது .. இவை அனைத்தும் நம் கர்மத் தொகுப்பின் விளைவு .. இவை ப்ரத்யேகமானவை .. ஒவ்வொருவர் முன் விரிந்திடும் உலகமும் வெவ்வேறு .. உலகத்தை விவரிக்கச் சொல்லுங்கள் .. அவர் தன் வாழ்க்கையைதான் விவரிப்பார் .. எனவே , படைக்கப் பட்டது ஒரே ஸம்ஸாரம் தான் என்றாலும் அவரவருக்கு அவரவர் கர்மவினைகள் தான் ஸம்ஸாரம் ..
இந்த உலகம் கவர்ச்சிகரமானது .. கசந்தால் வெறுப்பு , கோபம் , பழி வாங்கும் உணர்வு ஆகியவை மூலம் கவர்கிறது .. இனித்தால் விருப்பம் , பெருமை , பேராஶை , போன்றவையால் கவர்கிறது .. இந்தக் கவர்ச்சியை , இந்த பந்தத்தை வெட்ட வேண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. வைராக்யம் தான் கர்ம பந்தத்தை அறுத்திடும் .. வைராக்யம் என்ற வாளால் ஸம்ஸாரத்தை வெட்டி விடு ..
Comments
Post a Comment