ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 227
आशा पाश शतैर्बद्धाः .. (अध्याय १६ - श्लोक १२)
ஆஶா பாஶ ஶதைர்பத்தாஹ .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 12)
Aashaa Paash ShatairBaddhaah .. (Chapter 16 - Shloka 12)
அர்தம் : நூற்றுக்கணக்கான ஆஶை என்னும் கயிறுகளால் கட்டப் பட்டவன் ..
நம்பிக்கை தான் ஒரு மநுஷ்யனை வாழ வைக்கிறது என்கிறார்கள் .. நம்பிக்கை இல்லை என்றால் செயலில் இறங்க மாட்டோம் ..ஆனால் , இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் நம்பிக்கைகளால் பிணைக்கப் பட்டவன் அஸுரன் என்கிறார் .. ம்ருகங்கள் ராத்ரீயில் தம் உணவைத் தேடிக் கிளம்பும் போது , அவற்றுக்கு நம்பிக்கை என்ற ஒரு விஷயம் கிடையாது .. அது நித்ய க்ரமம் .. அன்றாடக் கடமை .. கிளம்புகின்றன .. பறவைகள் ஸூர்ய உதய நேரத்தில் தம் கூட்டை விட்டு வெளியே கிளம்பும் போது , நம்பிக்கை ஏதும் ஏந்திச் செல்வதில்லை .. பறந்து செல்கின்றன .. அதே திஶையில் செல்கின்றன .. ஸாயங்காலம் திரும்பும் போது , குஞ்ஜுகளுக்கு உணவுடன் திரும்புகின்றன .. நம்பிக்கை என்ற ஒரு விஷயம் இருந்தால் , "இன்று வேறு திஶையில் பறந்து பார்க்கலாம்" என்றோ , "இன்று அதிக அல்லது பெரிய வேட்டைக் கிடைக்க வேண்டும்" என்றோ , "இன்று புதிதாக வேறு ஏதேனும் கிடைக்க வேண்டும்" என்றோ ஆஶைகளும் உடன் பிறக்கும் .. இவை எல்லாம் பிராணி உலகத்தில் கிடையாது ..
சிலர் கேட்பர் .. "நம்பிக்கை இல்லை என்றால் , அவநம்பிக்கை உள்ளது என்று அர்தமா ?? அவநம்பிக்கையுடன் , நிராஶையுடன் ஒரு கார்யத்தில் எப்படி இறங்க முடியும் ?? இவர்களின் புரிதலில் ஒரு தவறு உள்ளது .. நம்பிக்கை இருந்தால் அங்கு அவநம்பிக்கையும் இருந்திடும் .. இன்று நம் கார்யத்தை வேறு வழியில் செய்து பார்க்கலாம் என்று யோஜித்தால் , அந்த வழியில் அவநம்பிக்கையும் இந்த வழியில் நம்பிக்கையும் கை கோர்த்து நிற்கின்றன என்று அர்தம் .. ஸத்ய நிலை என்னவென்றால் நம்பிக்கைக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது .. நம்முடைய ஆஶைகளின் மற்றொரு ரூபமே நம்பிக்கை .. நம் ஆஶைகள் அனைத்தும் பூர்தி ஆகாது , அவை பூர்தி ஆக , மற்ற பல ஶக்திகள் ஒத்து வர வேண்டும் , நம் ஒருவர் கைகளில் இல்லை என்பதையும் உணர்ந்திருப்பதால் என்பதால் அவநம்பிக்கையும் தொற்றிக் கொள்கிறது .. நம்பிக்கை இல்லை என்றால் அவநம்பிக்கையும் கிடையாது .. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் இல்லாத ஒரு நிலையில் , கடமை மாத்ரமே இருந்திடும் .. இதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மாத்ரமே இருந்திடும் .. செய்வதில் ஶ்ரத்தை இருந்திடும் ..
நூற்றுக்கணக்கான நம்பிக்கைகளால் கட்டப் பட்டிருக்கிறான் அஸுரன் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. உண்மையில் நம்பிக்கைதான் நம்மை மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்ய வைக்கிறது .. அதே சகதியில் உழல வைக்கிறது .. நம்பிக்கைதான் நம்மை இழுத்துச் செல்கிறது .. அலைக்கழிக்கிறது .. நம்பிக்கை மறைந்து ஶ்ரத்தை மலர்ந்து விட்டால் , கர்மம் மாத்ரமே நடந்திடும் .. செய்யப் பட வேண்டும் என்பவை செய்யப் படும் ..போட்டி , பொறாமை , ஓட்டம் , நிம்மதியின்மை எல்லாம் தகர்ந்து விடும் .. அமைதி நிறைந்திடும் .. ஆனந்தம் நிறைந்திடும் ..
Comments
Post a Comment