ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 77
கீதையில் சில சொற்றொடர்கள் - 77
महात्मा सुदुर्लभः । (अध्याय ७ - श्लोक १९)
மஹாத்மா ஸுதுர்லபஹ ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 19)
Mahaatmaa Sudurlabhah ... (Chapter 7 - Shloka 19)
அர்தம் : மஹாத்மா அரிதானவர் ...
பூமியில் நிலக்கரி ஸுரங்கங்கள் எத்தனை ? அவற்றில் பதுங்கி இருக்கும் நிலக்கரி எவ்வளவு ? அதே நிலக்கரியின் மாறுபட்ட ரூபமான வைரம் ? வைரம் கிடைக்கும் ஸுரங்கங்கள் எத்தனை ? அங்கு பதுங்கி இருக்கும் வைரம் ? வைரம் அரிதானது ... நிலக்கரியின் பண்பட்ட ரூபமே என்றாலும் , நிலக்கரி மிகப்பெரும் அளவில் இருக்கிறது என்றாலும் ... வைரம் அரிதானது . நிலக்கரி அத்தனையும் வைரமாகப் பண்படுவதில்லை . வைரமாக மாறுவதற்கு நிலக்கரி கடும் 'தபஸ்' மேற்கொள்ள வேண்டி இருக்கிறது .
கடலில் நத்தைகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளன . அவற்றின் ஓடான சிப்பிகளின் எண்ணிக்கையும் மிகப்பெரியது . நீர்த்துளிகளை ஏந்திய சிப்பிகளின் எண்ணிக்கையும் மிகப் பெரியது . ஆனால் , முத்துக்களைத் தாங்கிய சிப்பிக்கள் ? சிப்பிக்களில் அடங்கிய நீர்த்துளியின் பண்பட்ட ரூபம்தான் முத்து . நீர்த்துளிகள் அத்தனையும் முத்தாகப் பரிணமிப்பதில்லை . முத்தாக மிளிர்வதற்கு நீர்த்துளியும் கடும் 'தபஸ்'ல் ஈடுபட வேண்டி இருக்கிறது .
மநுஷ்யர்களில் பண்பட்ட மநுஷ்யன் மஹாத்மா . மிகக்கடும் தபஸின் விளைவாக மஹாத்மா ஆகிறான் . பல ஜன்மங்கள் தொடரும் தபஸ் ஒரு மநுஷ்யனை மஹாத்மாவாக மாற்றுகிறது . ஆரம்பத்தில் மனஸில் துளிர்த்திடும் ஆஶை . பிறகு , திட்டமிட்ட பயிற்சி . ஸ்வய நினைவுடன் கூடிய பயிற்சி . பின்னர் , அதுவே ஸ்வபாவமாக மாறி விட்ட நிலை . கவர்ச்சிகளில் மயங்கிடாமல் , தடுமாறி விழுந்திடாமல் , ஸ்திரமாக நிலைத்து விடும் ஸ்வபாவத்தின் வெளிப்பாடே 'மஹாத்மா' .
அனைத்து மநுஷ்யர்களும் மஹாத்மாவாக மாறி விட முடியுமா ? ஸத் யுகத்தில் அவ்வாறு இருந்திடும் என்று சொல்கிறார்கள் . ஸமுதாயத்தில் நிலவிடும் சூழ்நிலை , புஸ்தகங்களில் மாத்ரம் அல்லாமல் கண் முன் உலவிடும் மஹாத்மாக்களின் எண்ணிக்கை , ஆகியவை வெகு முக்யம் . இன்று , நம்மைச் சுற்றி உள்ள உலகம் கவர்ச்சிகள் மிகுந்ததாக உள்ளது . நம்மைச் சுற்றி உள்ள மநுஷ்யர்களின் வேட்கைகளும் , தேடல் முயற்சிகளும் வெளி நோக்கி , உலகத்தை நோக்கி , ஸுக போகத்தை நோக்கி உள்ளன . புறத்தோற்றத்தைப் பற்றி இருந்திடும் சிந்தனை அளவிற்கு , ஸத்யமான அகத்தோற்றத்தைப் பற்றி இல்லை . ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம் , மாதா அம்ருதானந்தமயீ மடம் போன்ற "ஆன்மீக" நிறுவனங்கள் நடத்தும் ஆயிரக்கணக்கான பள்ளி - கல்லூரிகளில் படித்திடும் லக்ஷக் கணக்கான மாணவர்களில் எத்தனை மனங்களில் ... மஹாத்மா இல்லை .. வெறும் ஸந்நயாஸீ ஆக வேண்டும் என்ற ஆஶை துளிர்க்கிறது ? வெறும் புறத்தோற்றம் ப்ரேரணை அளித்திடாது .
ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு வெளியிடுவது ஒரு ஸத்ய வாக்குமூலம் . இதில் வ்ரக்தி இல்லை . வருத்தம் இல்லை . It is a factual statement . மஹாத்மா மிக அரிதானவர் . துர்லபமானவர் .
Comments
Post a Comment