ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 144
लेलिह्यसे ... (अध्याय ११ - श्लोक २८)
லேலிஹ்யஸே ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 30)
Lelihyase ... (Chapter 11 - Shlokam 30)அர்தம் : சப்பு கொட்டிய படி நாக்கினால் நக்குகிறீர்கள் ...
நாக்கினால் நக்குவது உணவு சாப்பிடும் போது தவிர்க்க முடியாத ஒரு செயல் .. சாப்பிடும் விரல்களை நக்குவது , கையை - உள்ளங்கையை , புறங்கையை நக்குவது , உதட்டை நக்குவது .. ருசித்து ஆனந்தமாய் சாப்பிடுவதன் அடையாளம் .. கென்டக்கி கோழியின் விளம்பரத்தில் , "Lick your fingers" என்று எழுதி இருக்கும் .. அதாவது அவ்வளவு ருசியாக இருக்குமாம் அந்தக் கோழி .. ஸமீபத்தில் ஒரு சாக்லேட் விளம்பரமும் இதே பாணியில் வடிவு அமைத்திருந்தார்கள் .. நாம் எச்சில் என்பதைக் கடைப் பிடிக்கிறோம் .. எனினும் , நாம் மட்டுமே உபயோகப் படுத்தும் தட்டில் சாப்பிடும் போது , நக்கிச் சாப்பிடுவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது என்பது ஸத்யம் ..
ப்ராணிகள் சாப்பிட்டு விட்டு உதட்டை நக்கிக் கொள்வது தூய்மைக்காக .. "ஆஹா ! இது ருசியாக இருக்கிறது" ; "பேஷ் ! பேஷ் ! ரொம்ப நன்னா இருக்கு" என்று ரஸித்து , ருசித்து , அநுபவித்து சாப்பிடும் தன்மை ம்ருகங்களுக்குக் கிடையாதல்லவா !! அவை நக்கிக் கொள்வது தூய்மைக்காக மாத்ரமே .. ஆனால் , மநுஷ்யன் அவ்வாறல்ல .. அவனால் ருசியை ரஸிக்க முடியும் .. ஆனந்தமாக அநுபவிக்க முடியும் .. போஜனம் அவனது ஶரீரத்தில் ஆற்றல் மற்றும் ஸத்துக்கள் பெறுவதற்காக .. பற்களால் அரைப்பது ஜீர்ண கார்யத்தில் உதவுவதற்காக .. நாக்கினால் நக்குவது ருசியின் ஸாரத்தை அநுபவித்திட .. போஜனத்தில் பரமானந்த த்ருப்தி ஏற்பட .. உணவிட்டவரை மனஸார வாழ்த்திட .. நக்கிச் சாப்பிட வேண்டும் ..
நக்கிச் சாப்பிட வேண்டும் .. ஆனால் .. இந்தப் பாழாய்ப் போன நாகரிகம் .. அல்லது நாகரிகம் என்ற பெயரில் வளர்ந்திருக்கும் போலித்தனம் "என்னை நானாக" "நம்மை நாமாக" இருக்க விடுவதில்லை .. மற்றவர் என்னை கவனிக்கின்றனர் .. மற்றவர் என்னைப் பற்றித் தவறாக நினைப்பர் .. என்னுடைய அந்தஸ்துக்கு இது ஒத்து வராது .. போன்ற போலியான எண்ணங்கள் நம் செயல்களை , நமக்கு நன்மை பயக்கும் செயல்களை , நாம் ஆனந்தம் அநுபவிக்கும் செயல்களைத் தடுக்கின்றன .. நமக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய வைக்கின்றன .. நம் பாரம்பர்யத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய வைக்கின்றன .. (நக்கிச் சாப்பிடுவதில்லை .. இலையில் மிச்சம் வைத்து உணவை வீணாக்குகிறோம் .. கையை நனைத்துச் சாப்பிடுவதில்லை .. நன்றாக பிஸைந்து கொள்வதில்லை .. உயிர் உள்ள , உணர்ச்சி உள்ள கையால் சாப்பிடாமல் ஸ்பூன் என்ற உயிரற்ற ஜடத்தின் உதவியுடன் சாப்பிடுகிறோம் ..)
இங்கு பரமன் தன் வாயில் வேகமாக ப்ரவேஶிக்கும் ஜீவன்களை பற்களால் அரைத்து சூர்ணம் ஆக்கி , ஸர்வ திஶைகளிலும் நாக்கால் நக்குகிறார் .. அழிவையும் ரஸித்துச் செய்கிறார் .. ஆனந்தமாகச் செய்கிறார் .. ஆக்குவதில் ஆனந்தம் .. அழிப்பதிலும் ஆனந்தம் ..
Comments
Post a Comment